தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளுடன் முதல்வர் விஜய் இன்று (ஜூலை 1) சென்னை கோவளத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

த.வெ.க. அரசுக்கு காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் (சி.பி.எம்.) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் (சி.பி.ஐ.) கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்தச் சூழலில், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கூட்டணி ஒருங்கிணைப்பு முக்கியமாக பேசப்படலாம்.

எதிர்க்கட்சிகள் பலமாக இருப்பதால், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது மற்றும் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் தொடர்பாகவும் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் த.வெ.க. போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கூட்டணி கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் முதல்வர் வலியுறுத்த உள்ளார் என கூறப்படுகிறது.

கூட்டணிக்கு பெயர் சூட்டுவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.