திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுவது போல் தவெக அரசு கவிழும் நிலை இல்லை என்று கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கூறினார். அந்த சந்திப்பில் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு முழுக் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியதுடன், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளையும் முன்வைத்ததாக தெரிவித்தார்.
மேலும், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் தோழமை கட்சிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், தாங்கள் அமைச்சரவையில் அங்கம் பெறவில்லை; கூட்டணியிலும் இல்லை என்றும் அவர் கூறினார். ஜனநாயகத்தையும் மக்கள் அதிகாரத்தையும் பாதுகாக்கும் அரசியல் காரணங்களுக்காக வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாகவும், கவர்னர் மக்கள் அதிகாரத்தை மீறிச் செல்லக் கூடாது என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும் விளக்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், “இந்த அரசு கவிழும்” என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தமிழகத்தில் அப்படியான சூழல் இல்லை என்றும் கூறினார். போதுமான பெரும்பான்மை உள்ள நிலையில் ஸ்டாலின் கூறுவது நடக்க வாய்ப்பில்லை என்றும், தாங்கள் உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





