அமைச்சரவை உள்ளிட்ட ரகசிய அரசு ஆலோசனைகளில் இரண்டு தனிநபர்கள் பங்கேற்று ரகசிய தகவல்களை பெற்றதாகக் கூறி, ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.)யிடம் புகார் அளித்துள்ளது.
தி.மு.க. அமைப்புச் செயலர் பாரதி சார்பில் ‘இ-மெயில்’ மூலம் அனுப்பப்பட்ட புகாரில், முதல்வர் விஜய் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டங்கள், அதிகாரப்பூர்வ ஆய்வு கூட்டங்கள் மற்றும் பிற ரகசிய ஆலோசனை கூட்டங்களில் இவர்கள் பங்கேற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியமைப்பு சட்டத்தின் கீழ் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்துள்ள முதல்வருக்கு, அமைச்சரவை நடவடிக்கைகள் மற்றும் அரசின் முக்கிய தகவல்களின் ரகசியத்தை பாதுகாப்பது சட்டப்பூர்வ கடமை எனவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகங்களில் வெளியான தகவல்களை மேற்கோள் காட்டி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் முதல்வரின் நெருங்கிய உதவியாளர்கள் என்றும் கூறப்படும் இந்த இருவரும், தலைமைச் செயலகத்தில் நடைபெறும் உயர்மட்ட அரசு ஆலோசனைகள் உள்ளிட்ட கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வருவதாக தி.மு.க. தெரிவித்துள்ளது.
இவர்கள் அரசு பணியாளர்களா அல்லது தமிழக அரசின் பணிச்சட்ட விதிகளின்படி ரகசிய அரசு நடவடிக்கைகளில் பங்கேற்க தகுதி உள்ளவர்களா என்ற கேள்வியையும் புகார் எழுப்புகிறது. ரகசிய தகவல்களை பெறுவது உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் கூறி, இருவர்மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதல்வர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கோரப்பட்டுள்ளது.





