சட்டசபை தேர்தலுக்குப் பிறகு திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) முயன்றதாக, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி. வீரமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அவர்கள் எழுதிய கடிதத்தில், தங்களுடன் மேலும் சுமார் 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தது, எம்ஜிஆர்–ஜெயலலிதா கொள்கைகள் மற்றும் திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே என தெரிவித்துள்ளனர்.

மேலும், கட்சியில் சமரச உடன்பாடு ஏற்பட்ட பின்னரும் தலைமை பொறுப்புகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பல நிலைகளில் இருந்த நிர்வாகிகள் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதால் தொண்டர்கள் மனச்சோர்வடைந்ததாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சி.வி. சண்முகத்திற்கு எந்தப் பதவியும் வழங்காமல் ஒதுக்கி வைத்தது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மே 13 அன்று பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு ஜூன் 4 அன்று மீண்டும் அவர்கள் வகித்த பதவிகளே வழங்கப்படும் என இபிஎஸ் உறுதி அளித்ததாகவும், அது நடைமுறைக்கு வரவில்லை என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களாக நிர்வாகிகள், தொண்டர்கள் வரை சாரை சாரையாக கட்சியை விட்டு தவெகவில் இணைந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அறிவிக்கப்பட்ட பதவிகள் தங்களுக்கு வேண்டாம் என்றும், அந்த நியமனங்களின் கீழ் கட்சிப் பணியில் ஈடுபட முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர்கள் கூறியுள்ளனர். அதே நேரத்தில், தாங்கள் கட்சி உறுப்பினர்களாக தொடர்ந்து செயல்படுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.