மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக செஷல்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு தலைவர்களுக்கு இந்தியாவின் கலை, பாரம்பரியம் மற்றும் நூற்றாண்டு பழமையான கைவினைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல பரிசுகளை வழங்கினார்.

செஷல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினிக்கு, உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாதில் தயாரிக்கப்பட்ட கைவினைப் பித்தளை ஆமை பரிசாக வழங்கப்பட்டது. அல்டப்ரா ராட்சத ஆமைகள் வாழும் தீவுகளுக்காக செஷல்ஸ் பெயர் பெற்றிருப்பதால், இந்த பரிசு இந்திய கைவினைத் திறனுக்கும் செஷல்ஸின் இயற்கை பாரம்பரியத்துக்கும் இடையிலான தொடர்பை நினைவூட்டுவதாக கூறப்படுகிறது.

அதிபரின் மனைவி வெரோனிக்-கிற்கு, மத்தியப் பிரதேசத்தின் மகேஷ்வரில் தயாரிக்கப்படும் மகேஸ்வரி பட்டு சால்வை வழங்கப்பட்டது. பட்டு-பருத்தி கலவையில் வடிவியல் மற்றும் மலர் வடிவங்களுடன் நெய்யப்படும் இந்த சால்வையுடன், கர்நாடகாவின் பிதர் பகுதியைச் சேர்ந்த பித்ரிவேர் பெட்டியும் பரிசாக வழங்கப்பட்டது; கருப்பு ஆக்சிஜனேற்றப்பட்ட உலோக மேற்பரப்பில் வெள்ளிப் பதிக்கப்பட்ட மலர் வேலைப்பாடுகள் இதன் சிறப்பு.

துணை ஜனாதிபதி செபாஸ்டியன் பிள்ளைக்கு சிக்கிமில் தயாரிக்கப்பட்ட ஆர்க்கிட் கருப்பொருள் கொண்ட கலை ஓவியம் வழங்கப்பட்டது. அந்த ஓவியத்தில் சிக்கிமின் மலர் பாரம்பரியம் தேசிய பறவையான மயிலுடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், இடம்பெற்றுள்ள ஆர்க்கிட் செஷல்ஸின் தேசிய மலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது மனைவி லினாவுக்கு தங்க ஜரிகை வேலைப்பாடுகளுடன் கோவில் கட்டடக்கலையை பிரதிபலிக்கும் காஞ்சிபுரம் பட்டு சேலை பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், செஷல்ஸ் பார்லிமென்ட் சபாநாயகர் அஸரெல் எர்னெஸ்டாவுக்கு நீலகிரி மலைப்பகுதியில் வாழும் தோடர் சமூகத்தினர் உருவாக்கும் தோடர் எம்பிராய்டரி சால்வை வழங்கப்பட்டது. வெள்ளை பருத்தித் துணியில் அடர்த்தியான சிவப்பு மற்றும் கருப்பு தையல்களுடன் கையால் நெய்யப்பட்ட இந்த சால்வை, பழங்குடியினரின் அறிவும் கலாசார அடையாளமும் பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.