சென்னை: தவெக ஆட்சியை கவிழ்க்க கடந்த 40 நாட்களாக தொடர்ந்து முயற்சி நடந்து வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார். இதற்காக தவெக எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு பேரம் பேசப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக எம்எல்ஏக்களுக்கு ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை தொகை முன்வைத்து அணுகப்பட்டதாக தெரிவித்தார். மேலும், சில எம்எல்ஏக்கள் மிரட்டப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.

ஸ்டாலின் மற்றும் உதயநிதி உத்தரவின் பேரில் செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்கள் எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு பேரம் பேசியதாக அமைச்சர் குற்றம்சாட்டினார். திமுகவுடன் இபிஎஸும் இணைந்து “குறுக்கு வழியில்” ஆட்சி அமைக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

தவெக எம்எல்ஏக்களை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது என்றும், தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தவெக தயாராக இருப்பதாகவும் நிர்மல்குமார் தெரிவித்தார். பேரம் பேசியதாக கூறப்படும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.