அமெரிக்காவின் ஆர்லிங்டனில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்டு-32 போட்டியில் நார்வே அணி, ஐவரி கோஸ்ட் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரவுண்டு-16 சுற்றுக்கு முன்னேறியது. இந்த தோல்வியால் ஐவரி கோஸ்ட் அணி தொடரிலிருந்து வெளியேறியது.
இரு அணிகளும் தங்களது பிரிவுகளில் இரண்டாம் இடம் பிடித்த அணிகளாக இந்தப் போட்டியில் மோதின. தொடக்கம் முதலே வேகமும் ஆக்ரோஷமும் நிறைந்த ஆட்டமாக இது அமைந்தது. 39வது நிமிடத்தில் நார்வே அணியின் அன்டோனியோ நுாசா இடது காலால் அடித்த ஷாட்டை கோலாக மாற்றி அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்; முதல் பாதி முடிவில் நார்வே 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் ஐவரி கோஸ்ட் சுதாரித்துக் கொண்டு தாக்குதலை அதிகரித்தது. 74வது நிமிடத்தில் அமாத் டயல்லோ அடித்த சிறப்பான கோல் மூலம் ஆட்டம் 1-1 என சமநிலைக்கு வந்தது.
ஆட்டம் சமநிலையிலேயே முடியும் என்ற நிலையில், 86வது நிமிடத்தில் நார்வேயின் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் எர்லிங் ஹாலாந்து வெற்றிக்கோலை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். சர்வதேச போட்டிகளில் ஹாலாந்து அடித்த 60வது கோல் இதுவாகும்.
அடுத்த சுற்றான ரவுண்டு-16ல் நார்வே அணி பலம் வாய்ந்த பிரேசில் அணியை எதிர்கொள்ள உள்ளது.





