அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணி (PWD) மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் சமீபத்தில் நடந்த உயர் அதிகாரிகள் மாற்றம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
அரசு பொறியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் கூறுகையில், பொதுப்பணித் துறை செயலராக இருந்த மங்கத்ராம் சர்மா மாற்றப்பட்டு, போக்குவரத்து துறையில் இருந்த சுன்சோங்கம் ஜடக் சிரு அந்தப் பதவிக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நெடுஞ்சாலைத் துறை செயலராக இருந்த செல்வராஜ் மாற்றப்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அவர் செயலராக இருந்த காலத்தில், முந்தைய தி.மு.க. ஆட்சியில் பல டெண்டர்கள் விடப்பட்டதாகவும், அதில் சுமார் ₹2,000 கோடி மதிப்பிலான உத்தண்டி சாலை திட்ட டெண்டரும் அடங்கும் என்றும் கூறினர்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்னர், உத்தண்டி சாலை டெண்டரில் முறைகேடு நடந்ததாக கூறி அமைச்சர் அதை ரத்து செய்ததாக சங்க பிரதிநிதிகள் நினைவூட்டினர். அதிகாரிகள் துணையில்லாமல் இத்தகைய முறைகேடு நடக்க வாய்ப்பில்லை எனக் கூறிய அவர்கள், டெண்டர் விடப்பட்டபோது செயலராக இருந்த அதிகாரியை வைத்தே ரத்து செய்ய வைத்ததும், பின்னர் அவரை நெடுஞ்சாலைத் துறையிலிருந்து பொதுப்பணித் துறைக்கு மாற்றியதன் காரணம் என்ன என்ற கேள்வியை எழுப்பினர்.
உத்தண்டி சாலை டெண்டர் தொடர்பாக வழக்கு பதிவு செய்யும் முயற்சியும் நடக்கிறது என கூறிய அவர்கள், சட்ட நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பதுபோல் அவசரமாக மாற்றம் செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தையும் முன்வைத்தனர். மேலும், பொதுப்பணித் துறைக்கு வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிருவை 20 நாட்களுக்குள் நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்பதும் விடை தெரியாத கேள்வியாகவே இருப்பதாக தெரிவித்தனர்.




