ராஜஸ்தானில் லாரி மீது பஸ் மோதியதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீவிபத்தில் 8 பயணிகள் உடல் கருகி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

நள்ளிரவு 2.30 மணியளவில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நோக்கி அதிவேகமாக சென்ற பஸ், தவுசா அருகே டில்லி–மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது பயங்கரமாக மோதியது. மோதலுக்குப் பிறகு இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.

தீப்பற்றியதை உணர்ந்த பயணிகள் அலறியபடி வெளியேற முயன்ற நிலையில், சிலர் தப்பிக்க முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

விபத்துக்கான துல்லிய காரணம் இன்னும் தெரியவில்லை. பஸ் ஓட்டுநர் தூங்கியிருக்கலாம் என்றும், அதிவேகமும் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.