சென்னையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசை நிலைகுலையச் செய்ய சதி செய்ததாக கூறப்படும் வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவை கட்சி மாறச் செய்ய சில மர்ம நபர்கள் பேரம் பேசியதாக அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பேரம் பேசியதாக கூறப்படும் சென்னையை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். இவர், ‘லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்’ என்ற பெயரில் தேர்தலுக்கு தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடுபவர் என கூறப்படுகிறது.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கரூரை சேர்ந்த கார்த்திக், ரமேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கின் பின்னணியில், ‘திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதால் அந்த கட்சிகளில் இருந்து பலரும் தவெகவில் இணைய வருகின்றனர்; குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்னும் முயற்சி செய்கின்றனர்’ என அமைச்சர் நிர்மல் குமார் முன்பு குற்றம்சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.





