திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சிக்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த குழுவில் மொத்தம் 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.

சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யும் நோக்கில், மே 14 அன்று ஸ்டாலின் 19 குழுக்களை அமைத்திருந்தார். அந்த குழுக்களில் இருந்தவர்கள் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தனர்.

கள ஆய்வுக்குழுவினர் பின்னர் ஒரு அறிக்கையை தயாரித்து ஸ்டாலினிடம் சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் பதிவில், “உங்களின் குரல்களைக் கேட்டேன்; ஆய்வறிக்கைகளைப் படித்தேன். கட்சியின் அடுத்த நூறாண்டுக்கான பயணத்தைத் திட்டமிட மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு அமைக்கிறேன்” என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குழுவில் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், சக்கரபாணி, சிவசங்கர், தமிழரசி ரவிக்குமார், எம்.எம். அப்துல்லா, பரந்தாமன், முரசொலி, எழிலன், எஸ்.கே.பி. கருணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.