மருத்துவப் படிப்புகளுக்கான அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்ததாக 5 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது வந்த புகார்களை விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்தார்.

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., இடங்களுக்கான கட்டணங்களை அரசு நிர்ணயிக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.க்கு ஆண்டுக்கு ரூ.18,073 மற்றும் பி.டி.எஸ்.க்கு ரூ.16,073 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.5.40 லட்சம் வரை, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.16.20 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி.டி.எஸ். படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ரூ.2.50 லட்சம் வரை, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.6 லட்சம் வரை வசூலிக்கலாம்.

இதற்கு மேலாக விடுதி, போக்குவரத்து, உணவு உள்ளிட்ட கட்டணங்களும் அரசு நிர்ணயித்த வரம்புக்குள் இருக்க வேண்டும்; அவற்றை இணையதளத்தில் வெளியிட வேண்டும். மேலும் தேசிய மருத்துவ ஆணையம், மாணவர்களிடம் 4.5 ஆண்டுகளுக்கே கட்டணம் வசூலிக்க வேண்டும்; பயிற்சி (இன்டர்ன்ஷிப்) காலத்தில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

இந்த விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் விசாரணையை தொடங்கியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க உள்ளது. கூடுதல் வசூல் உறுதி ஆனால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.