தமிழகத்தில் மின் வாரியத்திற்கு மின்சாரம் விற்கவும், சொந்த பயன்பாட்டிற்காகவும் தனியார் நிறுவனங்கள் காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்து வருகின்றன. இதில் புதிதாக 736 மெகாவாட் சூரியசக்தி மற்றும் 400 மெகாவாட் காற்றாலை திறனுடன் அமைக்கப்பட்ட நிலையங்கள் மின் உற்பத்திக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இந்நிலையங்களை துணைமின் நிலையங்களுடன் இணைக்கும் பணியில் மின் வாரியம் தாமதம் செய்கிறது என முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மே மாதத்தில் புதிய காற்றாலை, சூரியசக்தி நிலையங்களுக்கு இணைப்பு ஒப்புதல் வழங்க வேண்டாம் என பொறியாளர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக, தயாராக உள்ள நிலையங்களில் இருந்து மாதக்கணக்கில் மின் உற்பத்தி தொடங்க முடியாமல் முடங்கியுள்ளது. இதனால் திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தை அரசு உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புகார்களைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க மின் வாரியத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தகைய தாமதங்கள் தொடர்ந்தால் புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களில் புதிய முதலீடுகள் வருவது பாதிக்கப்படும் என முதலீட்டாளர்கள் எச்சரித்துள்ளனர்.





