சென்னை: 2022ஆம் ஆண்டு சென்னையில் நடந்த ஐ.பி.எல். போட்டியைப் பார்வையிட்டபோது எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) உள்கட்சி விசாரணையை தொடங்கியுள்ளது.
அந்த காட்சியில் கோகைன் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு அமைச்சர் சரத்குமார் மறுப்பு தெரிவித்து, உடல்நிலை சரியில்லாத குழந்தைக்கு கொடுக்க மாத்திரையைத் தூளாக்கியதாக விளக்கம் அளித்தார். ஆனால் அந்த விளக்கத்தை ஏற்காமல் தி.மு.க. தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
பட்ஜெட் தாக்கல் மற்றும் ஏழு தொகுதிகள் இடைத்தேர்தல் நெருங்கும் சூழலில், சமூக வலைதளங்களில் மேலும் வீடியோக்கள் மற்றும் கருத்துகள் பரவி வருவதால் அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
த.வெ.க. வட்டாரத்தின் தகவலின்படி, சம்பவத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் கட்சி தலைமையிடம் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கட்சி தலைமையே விசாரணை நடத்தி வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் வெளிப்படையாக தெரிவித்தார்.
வட்டாரங்கள் கூறுவதாவது: இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இரண்டு மாவட்ட செயலர்கள் அடங்கிய குழு அமைச்சர் சரத்குமாரிடம் விசாரணை நடத்தி, ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளது. ஸ்டேடியத்தில் அவரது குழந்தை இருந்ததற்கான புகைப்படங்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது. விசாரணைக்கு குடும்பத்துடன் நேரில் ஆஜரான அமைச்சர், தன் குழந்தை மீது சத்தியம் செய்து தனக்கு போதைப் பழக்கம் இல்லை என கூறி அழுததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் நண்பர்களிடம் ரகசியமாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரது பதவி பறிக்கப்படும் என்றும் வட்டாரம் தெரிவித்துள்ளது.





