அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், போலீசார் நடத்திய புதிய சோதனைகளில் ரூ.77.85 லட்சம் ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மீட்புகள் தொடரும் விசாரணையின் ஒரு பகுதியாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு இதுவரை எட்டு பேரை கைது செய்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தார்மிக பொறுப்பேற்று ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலர் பதவியை ராஜினாமா செய்த சம்பத் ராயிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
கைதானவர்களில் ஒருவரான லவ்குஷ் மிஸ்ராவின் வீட்டில் போலீசார் மீண்டும் சோதனை நடத்தி, அவரது தந்தை பச்சுலாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட எட்டு பேரின் வீடுகளில் நடந்த சோதனைகளின் மூலம் இதுவரை மொத்தமாக ரூ.77.85 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சோதனையில் 11 கிராம் தங்கம், 375 கிராம் வெள்ளி மற்றும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சம் அளவிலான அமெரிக்க டாலர்களும் சிக்கியுள்ளன. மேலும், கடந்த 10 ஆண்டுகளாக தங்கி இருந்த யோகா மையத்திலிருந்து, ‘ராமராஜ்யா கோஷ்’ என்ற பெயரில் க்யூ.ஆர். குறியீட்டுடன் வைக்கப்பட்டிருந்த நன்கொடை பெட்டியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவில் வளாகத்தில் பணியாற்றும் சுமார் 400 தனியார் பாதுகாப்பு பணியாளர்களின் பங்களிப்பு குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கைதான அவினாஷ் சுக்லா, கண்காணிப்பு கேமரா குறைபாடுகளை பயன்படுத்தி காணிக்கை எண்ணும் அறையிலிருந்து பணத்தை கட்டுக்கட்டாக எடுத்துச் சென்று, கோவிலுக்குள் உள்ள கழிப்பறையில் மறைத்து வைத்து பின்னர் சிறிது சிறிதாக வெளியே எடுத்துச் சென்றதாக தெரிவித்ததாக போலீசார் கூறினர்; இதில் பலருக்கும் பங்கு இருப்பதாக அவர் கூறியதால் விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது.





