சியாட்டிலில் நடந்த பிபா உலகக் கோப்பை ‘ரவுண்ட்-32’ போட்டி கடைசி வரை பரபரப்பாக நீடித்தது. 0-2 என பின்தங்கிய பெல்ஜியம், கூடுதல் நேரத்தில் 3-2 என திருப்பி வென்று ‘ரவுண்ட்-16’ சுற்றுக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே செனகல் வீரர்கள் தாக்குதல்மிகு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 24வது நிமிடத்தில் ஹபீப் தியாரா கோல் அடித்தார். தொடர்ந்து 51வது நிமிடத்தில் இஸ்மைலா சாரும் வலை கிழித்து, செனகலை 2-0 என முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
தோல்வியின் விளிம்பில் இருந்த பெல்ஜியத்திற்கு மாற்று வீரராக வந்த ரோமேலு லுகாகு 86வது நிமிடத்தில் கோல் அடித்து நம்பிக்கை அளித்தார். அதற்கு மூன்று நிமிடங்களில் (89வது நிமிடம்) யூரி திலீமன்ஸ் அசாத்திய கோல் ஒன்றை அடித்து 2-2 என சமன் செய்ததால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.
கூடுதல் நேரத்தின் இறுதி நிமிடங்களில் (120+5) வார் தொழில்நுட்ப பரிசீலனைக்குப் பிறகு பெல்ஜியத்திற்கு பெனால்டி வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை திலீமன்ஸ் கோலாக மாற்றி 3-2 வெற்றியை உறுதி செய்தார். இதனால் பெல்ஜியம் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற, செனகல் தொடரிலிருந்து வெளியேறியது.





