கர்நாடகாவில் பெங்களூரு அருகே உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில், பீஹாரைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பெங்களூரு தெற்கு தாலுகாவிற்கு உட்பட்ட மடப்பட்டணா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் கல்குவாரியில் புதன்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. புதிய கிரஷர் இயந்திரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சுமார் 100 அடி உயரத்தில் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் கற்களை அகற்றும் வேலை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக ஒரு ராட்சத பாறை உருண்டு வந்து கீழே பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. சம்பவ நேரத்தில் 15 முதல் 20 பேர் வரை அங்கு இருந்ததாகவும், இதில் 7 பேர் பாறைக்கு அடியில் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் யாராவது இடிபாடுகளில் சிக்கியுள்ளார்களா என்பதை உறுதி செய்ய தேடுதல் பணியும் தொடர்ந்தது. மீட்பு நடவடிக்கைகள் நடைபெறுவதால் அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் டிகே சிவகுமார் இரங்கல் தெரிவித்தார்.





