வாட்ஸாப் செயலியில் அறிமுகமாக உள்ள ‘யூசர்நேம்’ (பயனர் பெயர்) வசதி இணையவழி மோசடிகளுக்கு வாய்ப்பளிக்குமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அதன் தாய் நிறுவனம் மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதியின் மூலம், குழு உரையாடல்கள் அல்லது புதிய நபர்களுடன் தொடர்பு கொள்ளும்போது மொபைல் எண் பகிராமல், பயனர் பெயரை வைத்து உரையாட முடியும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரக்கூடிய இந்த வசதிக்காக, பயனர் பெயரை முன்பதிவு செய்யுமாறு வாட்ஸாப் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பயனர் பெயர் மூலம் முதல் முறையாக தொடர்பு கொள்ளும் போது, ஒவ்வொரு பயனருக்கும் இணைக்கப்பட்ட ‘யூசர்நேம் கீ’ என்ற பிரத்யேக எண்ணை உள்ளிட வேண்டும் என வாட்ஸாப் தெரிவித்துள்ளது. அந்த எண்ணை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்றாலும், முதல் முறையாக தொடர்பு கொள்ளும் நபருக்கு அது எவ்வாறு பகிரப்படும் என்பது குறித்து கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், இணைய பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரபலங்கள், நிறுவனங்கள் அல்லது நம்பகமான நபர்களின் பெயரை ஒத்த பயனர் பெயர்களை உருவாக்கி ஆள்மாறாட்டம் செய்யும் அபாயம் இருப்பதாகவும், போலி கணக்குகளை விரைவாக கண்டறிந்து அகற்றும் வலுவான பாதுகாப்பு நடைமுறைகள் அவசியம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், இந்த வசதியின் சட்ட ரீதியிலான அம்சங்கள் ஆய்வு செய்யப்படுவதாகவும், தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் செய்யப்படாது என்றும் தெரிவித்துள்ளனர். மெட்டாவின் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால், இந்த வசதியை அறிமுகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.





