புதுடில்லி: ஹரியானா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் செயலரும் ஐஏஎஸ் அதிகாரியுமான பிரதீப் குமாரை, அரசு நிதி கையாடல் தொடர்பான வழக்கில் சிபிஐ கைது செய்துள்ளது.

விசாரணை அதிகாரிகள் கூறுவதன்படி, ஹரியானா அரசின் பல துறைகள் தனியார் வங்கியான ‘ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட்’ வங்கியில் கணக்குகள் தொடங்கியிருந்தன. பின்னர் போலி வைப்பு திட்டங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத பண பரிவர்த்தனைகள் மூலம் ரூ.504 கோடி மாயமானது கண்டறியப்பட்ட நிலையில், அந்த தொகை மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளின் கணக்குகளில் மீண்டும் வரவு வைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை முதல்வர் நயாப் சிங் சைனி சிபிஐக்கு மாற்றியதைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் தொடர்புடைய தனி வழக்கில், சண்டிகரில் உள்ள ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் செக்டர்-32 கிளையில் ரூ.169 கோடி அரசு நிதியை வைப்பு நிதியாக மாற்ற பிரதீப் குமார் அனுமதி அளித்ததாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் அந்த தொகைக்கு நிலையான வைப்புகள் உருவாக்கப்படாமல், வாரிய அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்ட கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டு, பின்னர் பல கணக்குகள் வழியாக திசைமாற்றம் செய்து கையாடல் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஒத்துழைக்கவில்லை என்றும், முன்ஜாமின் கோரி பஞ்சகுலா நீதிமன்றத்தை அணுகிய நிலையில், ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடைசி பணிநாளில் அவரது இருப்பிடத்தை கண்டறிந்து கைது செய்ததாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.