போலி மருந்து தயாரிப்பு தொடர்பான விசாரணையில் சாதகமாக செயல்பட ரூ.3 கோடி லஞ்சம் கேட்டதாக, ஐ.பி.எஸ். அதிகாரி தீபக் கஹ்லாவத்தை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மையமாகக் கொண்ட வழக்கில் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வழக்கு விவரங்களின்படி, போலி மருந்துகள் தயாரித்ததாக தொழிலதிபர் ராஜா மீது இந்தாண்டு தொடக்கத்தில் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கிலிருந்து தப்பிக்க உதவி கேட்டு, டில்லி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரதீப் சிங்கை ராஜா அணுகியதாக கூறப்படுகிறது.

அதன்பின், ராஜா மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி தீபக் கஹ்லாவத் இடையே சந்திப்பை பிரதீப் சிங் ஏற்பாடு செய்ததாக சி.பி.ஐ. தெரிவிக்கிறது. அந்த சந்திப்பில் ரூ.3 கோடி லஞ்சம் கேட்டு, முன்பணமாக ரூ.1.5 கோடி தருமாறு கோரியதாகவும், ராஜா ஹவாலா மூலம் ரூ.1 கோடியை திரட்டி பிரதீப் சிங்கிடம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் ரூ.50 லட்சம் ‘பிரபாத்’ என்ற இடைத்தரகருக்கு சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பிரதீப் சிங்கின் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.1.15 கோடி ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதீப் சிங், ராஜ்குமார் என்ற இடைத்தரகர் உள்ளிட்ட ஐந்து பேரை சி.பி.ஐ. கைது செய்தது. அவர்களிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில், 2012-ஆம் ஆண்டு ஹரியானா கேடரைச் சேர்ந்த தீபக் கஹ்லாவத்தை நேற்று கைது செய்ததாக சி.பி.ஐ. தெரிவித்தது; சம்பவ நேரத்தில் அவர் சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தில் மண்டல அதிகாரியாக பணியாற்றியதாகவும் கூறப்பட்டது.

மேலும், தீபக் கஹ்லாவத்துடன் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தி டிஜிட்டல் சாதனங்கள், ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததாக சி.பி.ஐ. தெரிவித்தது. அவரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.