சென்னை: இணையத்தில் கசியவிடப்பட்டதாக கூறப்படும் ஜனநாயகன் திரைப்படத்தை சுமார் 1 கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளதாக சென்னை மாநகர போலீஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த வழக்கு, அனுமதியின்றி ஜனநாயகன் படம் இணையத்தில் பரவியதாக கூறப்படும் சம்பவத்தைச் சார்ந்தது. நடிகர் விஜயின் கடைசிப் படமாக குறிப்பிடப்படும் இந்த படம், சென்சார் சான்றிதழ் உள்ளிட்ட பல காரணங்களால் இன்னும் வெளியாவவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
படம் கசிந்ததையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை தொடங்கி பலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
கசிவு தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இதனிடையே வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்கள் இன்று (ஜூலை 02) விசாரணைக்கு வந்தன. அப்போது, ஜாமின் வழங்கப்பட்டால் ஆதாரங்களை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாக போலீஸ் தரப்பு வாதிட்டது.
போலீஸ் வாதங்களை ஏற்ற நீதிபதிகள், ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.





