அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் இந்திய பொருளாதாரத்தின் ‘டிஎன்ஏ’ மாற்றப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற இந்தியா–ஜப்பான் பொருளாதார மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

இந்த நிகழ்வில், ஹரியானா மாநிலம் கார்கோட் நகரில் மாருதி சுசூகி நிறுவனத்தின் நான்காவது வாகன உற்பத்தி தொழிற்சாலையை இந்தியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்தியாவுடன் நீண்டகால உறவை வைத்துள்ள பல நிறுவனங்கள் உள்ளதாகவும், சில நிறுவனங்களின் தொடர்பு 100 ஆண்டுகளைத் தாண்டி நீடிப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.

இந்தியா–ஜப்பான் பொருளாதார ஒத்துழைப்பை எடுத்துக்காட்டிய அவர், சுசூகி தயாரிக்கும் மூன்று கார்களில் இரண்டு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இங்கிருந்து 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறினார். ஜப்பானின் நிபுணத்துவம் மற்றும் முதலீடு, இந்தியாவின் வேகம் மற்றும் அளவுடன் இணைந்தால் உலக நாடுகள் பலன் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நுகர்வு குறைவு, வர்த்தக நிச்சயமற்ற நிலை மற்றும் விநியோக சங்கிலி தடைகள் காரணமாக உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மோடி கூறினார். உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரங்களில் இந்தியா முன்னிலையில் இருப்பதாகவும், கடந்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த வளர்ச்சி 7.7% ஆக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் வரி சீரமைப்பு, நிர்வாக மேம்பாடு, தொழில் செய்வதை எளிதாக்கும் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அனைத்து துறைகளிலும் தனியார் பங்கேற்பு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், முக்கிய துறைகளில் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், பொருளாதார பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் பிரதமர் டகாய்ச்சியுடன் முடிவு செய்துள்ளதாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஜப்பானின் முதலீடு 10 டிரில்லியன் யென் அளவுக்கு உயரவும், ஜப்பான் நிறுவனங்களின் எண்ணிக்கை இருமடங்காகவும் அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கை முன்வைத்தார்.