புதுடில்லியில் ஜப்பான் பிரதமர் டகாய்ச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நோக்கிய பாதையில் முன்னின்று இந்தியா–ஜப்பான் உலகை வழிநடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள டகாய்ச்சி டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இரு தலைவர்கள் முன்னிலையில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத் தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்தியாவுக்கு முதன்முறையாக வந்துள்ள டகாய்ச்சியை வரவேற்ற மோடி, அவர் ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்றும் மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவர் என்றும் குறிப்பிட்டார். பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் உலகளாவிய சிக்கலான சூழலில் பரஸ்பர நம்பிக்கையே மிகப்பெரிய சொத்து என்று கூறியதை நினைவூட்டிய அவர், அந்த அளவுகோளில் இந்தியா–ஜப்பான் உறவு முழுமையாக சோதிக்கப்பட்டுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பானுக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறிய மோடி, டகாய்ச்சியின் வருகை சர்வதேச ஒத்துழைப்பில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதாக தெரிவித்தார். இரு நாடுகளும் உலகின் மிகப்பெரிய ஐந்து பொருளாதாரங்களில் இடம்பெறுகின்றன என்றும், விதிமுறைகள் அடிப்படையிலான இந்தோ-பசிபிக் அமைவதே இரு நாடுகளின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த டகாய்ச்சி, இந்தியாவும் ஜப்பானும் பெரிய ஜனநாயகங்களும் சந்தை பொருளாதாரங்களும் என்பதால், சுதந்திரமான மற்றும் விதிமுறைகள் அடிப்படையிலான இந்தோ-பசிபிக் உருவாக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். இம்முயற்சிகள் பிராந்தியத்திற்கு அமைதி, வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை கொண்டு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.





