ஏடன் வளைகுடாவில் சரக்குக் கப்பலுக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கடற்கொள்ளையர்களை இந்திய கடற்படை விரட்டியடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகப் பகுதியில் முக்கிய சரக்குகளை ஏற்றிக் கொண்டு இந்தியாவை நோக்கி வந்த ‘எம்வி கோல்டன் ஆர்சனல்’ சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடற்கொள்ளையர்கள் கப்பலுக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

இதனால் கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு அறைக்குள் சென்று தஞ்சமடைந்தனர். பின்னர் அலைவரிசை (ரேடியோ) மூலம் கடற்கொள்ளை முயற்சி குறித்து இந்திய கடற்படைக்கு தகவல் அளித்தனர்.

தகவல் கிடைத்ததும் இந்திய கடற்படையின் போர்க்கப்பல் ‘ஐஎன்எஸ் திரிகண்ட்’ அதிவேகமாக சம்பவ இடத்தை நோக்கி விரைந்தது. கடற்படைக் கப்பல் அருகே வருவதை கண்ட கடற்கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

தொடர்ந்து மார்கோஸ் கமாண்டோக்கள் நடவடிக்கையாக கப்பலுக்குள் புகுந்து அதை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பாதுகாப்பை உறுதி செய்தனர்.