மதுரை மாவட்டம் பொட்டப்பட்டி, சூரப்பட்டி அருகே பாலாற்றில் அமைக்கப்பட உள்ள தடுப்பணை திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். தடுப்பணை கட்டப்பட்டால் கீழ்ப்பகுதிக்கு நீர்வரத்து குறைந்து, விவசாயமும் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படும் என அவர்கள் கூறுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட கரந்தமலையில் உருவாகும் பாலாறு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக ஓடுகிறது. ஏற்கனவே பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டதால் கீழ்ப்பகுதி கிராமங்களுக்கு நீர் கிடைப்பது குறைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் ரூ.9.5 கோடி மதிப்பில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை அப்போது முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலின் அறிவித்ததாகவும், தேர்தலுக்கு முன்பே டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விஜய் தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்ற பின்னர் அதிகாரிகள் பணிகளை வேகப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
தடுப்பணை கட்டப்படும் இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் தனியார் குடிநீர் ஆலை இயங்குவதால், அந்த ஆலையின் தேவைக்காகவே தி.மு.க. வினரும் அதிகாரிகளும் திட்டத்தை முன்னெடுத்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
தி.மு.க. காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் நிறைவேற்றப்பட்டால் கீழ்ப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்; அதனால் தற்போதைய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படலாம் என த.வெ.க. வினர் அச்சம் தெரிவித்துள்ளனர். கட்சித் தலைமைக்கும் அரசுக்கும் தகவல் அனுப்பி, தடுப்பணை பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.




