வாஷிங்டன்: ஹோட்டல்கள், கோல்ப் மைதானங்கள், ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வருவாய், கடந்த ஆண்டில் சுமார் ரூ.22,000 கோடியாக உயர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கிரிப்டோகரன்சி தொடர்பான முயற்சிகள் குறிப்பிடத்தக்க பங்காற்றியதாக கூறப்படுகிறது.
டிரம்ப் தொழில் குழுமம் வழக்கமாக விருந்தோம்பல், வணிக வளாகங்கள், கோல்ப் வசதிகள் மற்றும் நிலம் சார்ந்த ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் மூலம் அதிக வருவாய் ஈட்டியது. ஆனால் தற்போது டிஜிட்டல் நாணய திட்டங்கள் அந்த பாரம்பரிய வருவாய் வழிகளை விட முன்னிலை பெற்றுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024ல் டிரம்ப் குடும்பம் கிரிப்டோ துறையில் முழுமையாக நுழைந்து, “வேர்ல்டு லிபர்டி பினான்ஷியல்” என்ற பெயரில் புதிய கிரிப்டோகரன்சியை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதில் டிரம்பும் அவரது மகன்களும் முக்கிய பங்குதாரர்களாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், டிரம்ப் மீண்டும் அதிபராகும் முன்பே “டிரம்ப் மீம் காயின்” என்ற பெயரில் மற்றொரு கிரிப்டோகரன்சி அறிமுகப்படுத்தப்பட்டதாக தகவல். இதன் பின்னர் கிரிப்டோ திட்டங்கள் மூலம் வருவாய் பல மடங்கு உயர்ந்ததாக கூறப்படுகிறது.
2024ல் சுமார் ரூ.6,000 கோடியாக இருந்த மொத்த வருவாய், 2025ல் ரூ.22,000 கோடியாக உயர்ந்ததாகவும், அதில் சுமார் ரூ.11,900 கோடி கிரிப்டோகரன்சி மூலம் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது முந்தைய பதவிக்காலத்தில் கிரிப்டோகரன்சியை டிரம்ப் “ஏமாற்று வேலை” என விமர்சித்திருந்ததாகவும் அந்த தகவல் நினைவூட்டுகிறது.





