உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வணிகக் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை ஈரான் மற்றும் ஓமன் முன்னெடுத்து வருகின்றன.
ஈரான்–ஓமன் இடையே அமைந்துள்ள இந்த கடல்வழித்தடத்தில் இதுவரை சர்வதேச வணிகக் கப்பல்கள் பெரும்பாலும் எந்தக் கட்டணமும் இன்றி தடையின்றி பயணித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போருக்குப் பின்னர் ஈரான் இந்த வழித்தடத்தை மூடியதாகவும், இதனால் உலக எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததாகவும் செய்தி கூறுகிறது. இந்த சூழ்நிலையைத் தொடர்ந்து, இந்த பாதையை “பணமாக்க” இருப்பதாக ஈரான் கூறி வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜலசந்தி நிர்வாகம் தொடர்பாக ஈரான்–ஓமன் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மலாக்கா மற்றும் சிங்கப்பூர் ஜலசந்திகளில் தனியார் அறக்கட்டளைகள் மூலம் விருப்பக் கட்டணம் வசூலிப்பது போன்ற அமைப்பை உருவாக்கலாம் என ஓமன் ஆலோசனை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், ஈரானிய அதிகாரிகள் இது கட்டாயக் கட்டணமாகவே இருக்கும் எனத் தெளிவுபடுத்தியுள்ளனர். அமெரிக்காவின் நட்பு நாடான ஓமன் இந்த விவகாரத்தில் ஈரானுடன் கைகோர்ப்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக எதிர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





