அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 9 மூத்த தலைவர்கள் பகிரங்க கடிதம் எழுதி, கட்சியின் நிலை “தவறான முடிவுகளால்” பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். அ.தி.மு.க. என்பதை “ஆல விருட்சம்” என குறிப்பிடும் வகையில், அது தற்போது கரைந்து வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கட்சிக்குள் ஏற்பட்ட பிளவை ஒட்ட வைக்கும் முயற்சியாக, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருக்கு பழனிசாமி புதிய பொறுப்புகளை அறிவித்திருந்த நிலையில் இந்த கடிதம் வெளியாகியுள்ளது. விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், வீரமணி, அருண்மொழிதேவன், பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணமுரளி, சுகுமார் ஆகியோர் கையெழுத்திட்ட கடிதத்தில், தற்போது அறிவிக்கப்பட்ட பொறுப்புகள் கட்சி வளர்ச்சியை கருத்தில் கொள்ளாதவை என கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பழனிசாமியை முதல்வராகவும் பின்னர் பொதுச்செயலராகவும் அமர வைக்க கட்சிக்காக வழக்குகளையும் எதிர்கொண்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த சூழலில் கட்சிக்காக நின்ற சி.வி. சண்முகத்துக்கு எந்தப் பதவியும் வழங்காமல் ஒதுக்கி வைத்ததை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேர்தலுக்கு முன்பும் பின்பும் விலகிச் சென்ற எம்.எல்.ஏ.க்களை மீண்டும் கட்சிப் பணிக்கு கொண்டு வர, அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஓ.எஸ். மணியன் வாயிலாக கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி தகுதி நீக்கக் கடிதத்தை திரும்ப பெற்றதாகவும் கூறியுள்ளனர். அந்த உடன்படிக்கையின் படி, அவரவர் வகித்த பதவிகளை ஜூன் 4க்குள் திருப்பி தருவதாக உறுதியளித்தும் அது நிறைவேறவில்லை எனவும், இதனால் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைவோர் அதிகரிக்கின்றனர் எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனால், தற்போது அறிவிக்கப்பட்ட பொறுப்புகளை “தவறான முடிவு” என கருதி, தங்களுக்கு வழங்கப்பட்ட பதவிகளை ஏற்கவில்லை; கட்சி உறுப்பினர்களாகவே இருந்து செயல்படுவோம் என 9 பேரும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்த முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், தலைமையின் சுயநலப் போக்கு கட்சியை பாதிக்கிறது என பழனிசாமி மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.




