சென்னை மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தவெகவில் இணையத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவில் இணைந்தால், அடுத்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் தற்போது திமுக சார்பில் 151 கவுன்சிலர்கள் உள்ளனர். அ.தி.மு.க.வில் 15 கவுன்சிலர்கள் இருந்த நிலையில், கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்னைகளால் பலர் தவெகவுக்கு மாறி வருவதாகவும், இதுவரை ஐந்து கவுன்சிலர்கள் தவெகவில் இணைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

இதே போன்று திமுக கவுன்சிலர்களும் தவெகவில் இணைவது குறித்து பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வரவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட அனுமதி வேண்டும் என்பதே பேச்சின் மையமாக இருப்பதாக தகவல்.

சில திமுக கவுன்சிலர்கள் கூறியதாக வெளியான தகவலின்படி, சென்னை மாநகராட்சியில் மக்கள் செல்வாக்கு தவெக பக்கம் சென்றுவிட்டதாக அவர்கள் கருதுகின்றனர். இதனால் திமுக டிக்கெட்டில் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் உருவாகி, தவெகவில் இணைய முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த கோரிக்கைக்கு தவெக தரப்பில், கட்சி மேலிடத்துடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே தவெகவில் இணைந்த கவுன்சிலர்களுக்கு அக்கட்சி சார்பில் போட்டியிடலாம் என உறுதி அளிக்கப்பட்டதாகவும், அதனால் பலர் அதே வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.