இந்தியாவில் மின்சார வாகனங்கள் (EV) பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த மாற்றம் தொடர்ந்தால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைப்பதன் மூலம் அரசுக்கு பெரிய அளவில் சேமிப்பு கிடைக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
போர் காரணமான இடையூறுகளால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்ந்துள்ளது. இதன் பின்னணியில் சமீப காலமாக மின்சார வாகனங்களுக்கு மக்கள் மாறும் போக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 12 மாநிலங்களில் மின்சார வாகன விற்பனை பங்கு இரட்டை இலக்கத்தை கடந்ததாகவும், அசாம் மற்றும் ஒடிசா முன்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தரவுகளின்படி, 2030க்குள் புதிய வாகனப் பதிவுகளில் மின்சார வாகனங்களின் பங்கை தற்போதைய 10% இலிருந்து 20% ஆக உயர்த்தினால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேமிக்க முடியும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் வாகனங்கள் 2025ல் 2.9 கோடியிலிருந்து 2030க்குள் சுமார் 4 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சுமார் 80 லட்சம் வாகனங்கள் (20%) மின்சார வாகனங்களாக இருக்கலாம்; 2025ல் மின்சார வாகனப் பதிவுகள் 15.7 லட்சமாக இருந்தன.
மேலும், 2027 முதல் 2030 வரை பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக கூடுதலாக 35 லட்சம் மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடும் என்றும், இத்தகைய வளர்ச்சி கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை கணிசமாக குறைக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.





