புதுடில்லி: மேற்காசியாவில் நிலவிய போர் பதற்றம் காரணமாக உயர்ந்திருந்த சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள், எரிபொருள் கூடுதல் கட்டணம் குறைக்கப்படத் தொடங்கியதால் தளர்வடைந்து வருகிறது.

பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா–ஈரான் இடையிலான போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் தாக்கமாக எரிபொருள் விலை உயர்ந்ததால், செலவுகளை ஈடுகட்ட விமான நிறுவனங்கள் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தி, பயணிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தின.

இந்நிலையில், அமெரிக்கா–ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விநியோகம் சீரடைந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் குறைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, விமானக் கட்டணத்தில் முக்கியப் பங்காற்றும் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை குறைக்க விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் சர்வதேச விமான டிக்கெட் விலைகள் குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ஏர் இந்தியா நிறுவனம் ஜூலை 1 முதல் சர்வதேச எரிபொருள் கூடுதல் கட்டணத்தை குறைத்துள்ளது. ஐரோப்பா மற்றும் பிரிட்டன் வழித்தடங்களுக்கு 38% மற்றும் ஆஸ்திரேலியா, வட அமெரிக்க வழித்தடங்களுக்கு 28.5% குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10 முதல் ஐரோப்பா செல்லும் பயணிகளிடம் ரூ.19,520 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.11,900 ஆக குறைந்துள்ளது; ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்க வழித்தடங்களில் ரூ.26,664 இருந்து ரூ.10,045 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஓமனின் சலாலா மற்றும் குவைத் சேவைகளை மீண்டும் தொடங்கி, மேற்காசியாவில் வழங்கி வந்த அனைத்து இடங்களுக்கும் சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.