திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில், நாளையும் நாளை மறுதினமும் அமோனியா வாயுவை பாதுகாப்பான முறையில் வெளியேற்ற உள்ளதாக கலெக்டர் கவிதா தெரிவித்தார்.
இந்த தொழிற்சாலையில் ஜூன் 21 அன்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் ஒடிஷா, அசாம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட 83 பேர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 48 பேர் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீதமுள்ள அமோனியா வாயுவை தொழில்நுட்ப வல்லுநர்கள் பாதுகாப்பு நடைமுறைகளுடன் அகற்ற உள்ளதாக கலெக்டர் கூறினார். தொழிற்சாலையைச் சுற்றி 500 மீட்டர் சுற்றளவு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிக்குள் தொழிற்சாலையை ஒட்டி 300 மீட்டர் சுற்றளவில் உள்ள பிற தனியார் தொழிற்சாலைகள், கடைகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுவர். அமோனியா வெளியேற்றப்படும் நாட்களில் தேசிய நெடுஞ்சாலையில் தடைப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் இயக்கப்படும்.
கன்னிகைப்பேர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்காக பொதுமக்கள் 99525 90412 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.





