அயோத்தி ராமர் கோவில் காணிக்கை முறைகேடு விவகாரத்தை தொடர்ந்து, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வக்கீல்கள் வலியுறுத்தி போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.

ராமர் கோவில் காணிக்கையிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், உத்தர பிரதேச அரசு அமைத்த மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களின் வீடுகளில் நடந்த சோதனையில் ரூ.77.85 லட்சம் ரொக்கம், 11 கிராம் தங்கம், 375 கிராம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அறக்கட்டளையின் முன்னாள் பொதுச்செயலர் சம்பத் ராயிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

பைசாபாத் வக்கீல்கள் சங்கம் சார்பில், சம்பத் ராய், முன்னாள் அறங்காவலர் அனில் மிஸ்ரா, கட்டுமான பணிகளை கவனித்த கோபால் ராவ் மற்றும் முதல் தகவல் அறிக்கையை அளித்த கிருஷ்ண மோகன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து, பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்ற வளாகத்திலிருந்து ராம ஜென்மபூமி போலீஸ் நிலையம் வரை கண்டன பேரணி நடத்தப்பட்டது. போலீஸ் நிலையம் முன் முழக்கங்கள் எழுந்த நிலையில், போலீசார் மற்றும் வக்கீல்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் சிலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் சில வக்கீல்கள் நிலையத்துக்குள் சென்று வழக்கு பதிவு கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டு புகார் மனுவை அளித்தனர்; உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். சம்பத் ராய் மற்றும் அனில் மிஸ்ரா ராஜினாமாவை ஏற்கலாமா அல்லது நிராகரிக்கலாமா என்பது குறித்து ஜூலை 6-ம் தேதி நடைபெறும் அறக்கட்டளை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.