மதுரை தோப்பூரில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாகத் தொடங்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை, மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், 2018 முதல் பலமுறை வழக்குகள் தாக்கல் செய்து கட்டுமானத்தை விரைந்து முடிக்க நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்ததாகவும், 2025-ல் நடந்த விசாரணையில் மத்திய அரசு தரப்பு முதல் கட்டடப் பணிகள் 2026 ஜனவரிக்குள் முடிந்து பின்னர் பயன்பாட்டிற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

ஆனால் தற்போது வரை எந்தப் பணியும் நடைபெறவில்லை என்றும், 2018 முதல் 2026 வரையிலான மத்திய பட்ஜெட்டுகளில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான நிதி ஒதுக்கீடு இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், வழக்கு விசாரணைகளின்போது நீதிமன்றத்தைத் திசைதிருப்பும் வகையில் தவறான பதில்கள் அளிக்கப்படுவதாகக் கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரினார்.

மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் தரப்பில், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மனுதாரர் ஆய்வு இன்றி மேம்போக்காக மனு தாக்கல் செய்துள்ளதாகவும் வாதிடப்பட்டது. நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு, மனுதாரர் இதே விவகாரத்தில் மீண்டும் மீண்டும் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டு, கட்டுமானம் நடந்து வருவதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.