தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற நிலையில், அவரது சமூக வலைதள கணக்குகள் வழியாக புகைப்படங்களை ‘மார்பிங்’ செய்து ஆபாச வீடியோக்களாக வெளியிட்டு பரப்பியதாக கூறப்படுகிறது. அந்த உள்ளடக்கத்தை நீக்க வேண்டுமெனில் பணம் தர வேண்டும் என மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பெண்ணின் சகோதரர் காவல்துறையில் புகார் அளித்தார். தொடர்ந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி எல். விக்டோரியா கவுரி, சைபர் குற்றங்களில் நடவடிக்கை தாமதம் பேராபத்தாக மாறக்கூடும் எனக் குறிப்பிட்டார். மின்னணு தடயங்கள் எளிதில் அழிந்துவிடும்; இணைய முகவரிகள் மறையலாம், பயனர் கணக்குகள் நீக்கப்படலாம், ஐ.பி. பதிவுகள் மேலெழுதப்பட்டு அழிந்துவிடலாம் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

டிஜிட்டல் சான்றுகளை உடனடியாக பாதுகாப்பது நீதியை நிலைநாட்ட அத்தியாவசியம் என வலியுறுத்திய நீதிபதி, ‘மார்பிங்’ என்பது ஒருவரின் தனியுரிமை, நற்பெயர் மற்றும் மனநலப் பாதுகாப்பின் மீது திட்டமிட்ட தாக்குதல் என்றார். புகாரில் முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து, மார்பிங் செய்யப்பட்ட ஆபாச பதிவுகளை இணையத்திலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.