பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட்-32 நாக் அவுட் போட்டியில் ஸ்பெயின் அணி ஆஸ்திரியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு எளிதாக முன்னேறியது.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறும் இந்த தொடரில், இன்று நடந்த இந்த மோதலில் தொடக்கம் முதலே பந்தை கட்டுப்பாட்டில் வைத்த ஸ்பெயின் ஆட்டத்தின் ஓட்டத்தை முழுமையாக நிர்ணயித்தது.

36வது நிமிடத்தில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் மைக்கேல் ஒயர்சபால் கோல் அடித்து கணக்கைத் தொடங்கினார். இதனால் முதல் பாதி முடிவில் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் ஸ்பெயின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரியா தடுமாறியது. 66வது நிமிடத்தில் பெட்ரோ போரோ கோல் அடித்து முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார். 89வது நிமிடத்தில் ஒயர்சபால் மீண்டும் கோல் அடித்து தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.

ஆட்ட நேர முடிவில் 3-0 வெற்றியுடன் ஸ்பெயின் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. தோல்வியடைந்த ஆஸ்திரியா அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.