வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை டாக்டர் போல சித்தரிக்கும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு, தன்னை விமர்சிக்கும் பிரபலங்களை கேலி செய்துள்ளார்.
அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்களையும் விமர்சகர்களையும் நையாண்டி செய்யும் வகையில் டிரம்ப் அவ்வப்போது ஏஐ வீடியோக்களை பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த முறையில் வெளியான ‘டாக்டர் டிரம்ப்’ வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
வீடியோவில் வெள்ளை லேப் கோட் அணிந்து, கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் வைத்துக் கொண்டு தோன்றும் அவர், தன்னை எதிர்க்கும் சில பிரபலங்களுக்கு “Trump Derangement Syndrome (TDS)” என்ற கற்பனை நோய் இருப்பதாகவும், அதற்கான சிகிச்சை தன்னிடம் இருப்பதாகவும் கூறுவது போல அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏஐ வீடியோவில் ஆஸ்கர் விருது பெற்ற நடிகை ஜூலியா ராபர்ட்ஸ், ராபர்ட் டி நிரோ, வூபி கோல்ட்பர்க், ரோஸி ஓ’டொனல் உள்ளிட்டோர் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். இது தொலைக்காட்சி மருத்துவ விளம்பரம் போல வடிவமைக்கப்பட்டு, முடிவில் ‘போலி செய்திகளைப் பார்ப்பதை நிறுத்துங்கள்; தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்’ என ஆலோசனை வழங்குவது போல முடிகிறது.





