வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை (பெட்னா) சார்பில் நியூ ஜெர்சியில் நடைபெற்ற தமிழ் விழாவில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். தமிழர் அடையாளத்தை விரிவாகவும் அனைவரையும் உள்ளடக்கும் வகையிலும் பார்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழர்கள் பல துறைகளிலும் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், தெருவோர வியாபாரிகளிலிருந்து உயர்ந்த பதவிகள் வரை தமிழர்கள் காணப்படுகிறார்கள் என்றார். தமிழரை “சிறிய வட்டம்” அல்லது மத அடையாளங்களுக்குள் மட்டும் சுருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

இதற்கு ஆதாரமாக புறநானூற்றை எடுத்துக்காட்டிய அண்ணாமலை, இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அதன் கருத்துகள் பொருந்துகின்றன என்றார். 182-ஆம் பாடலான “உண்டாலம்ம, இவ்வுலகம்” என்ற பாடலை குழந்தைகள் படிக்க வேண்டும் என்று பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார்.

அந்தப் பாடலில் கூறப்படும் பண்புகளை நினைவூட்டிய அவர், சிறந்ததைப் பெற்றாலும் பகிர்ந்து உண்ணும் மனப்பான்மை, கோபமில்லாத இயல்பு, அஞ்சாமல் தூங்காமல் உழைக்கும் உறுதி, புகழுக்காக உயிரையும் தியாகம் செய்யத் தயாராகும் மனநிலை ஆகியவை ஒரு தமிழனின் அடையாளமாக இருக்க வேண்டும் என்றார். கல்வியின் முக்கியத்துவம் குறித்து தமிழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

வரும் காலங்களில் பெட்னா மேலும் சிறப்பாக அனைவரையும் ஒருங்கிணைக்கும் பாலமாக இருக்க வேண்டும் என்றும், உலகத் தமிழருக்கான குரலாக செயல்பட வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.