சினிமா திருட்டு மற்றும் சட்டவிரோதமாக பகிரப்படும் ஓடிடி உள்ளடக்கங்கள் தொடர்பான புகார்களில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், டெலிகிராம் தளத்தில் பரவும் திருட்டுத் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி உள்ளடக்கங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தியாவின் படைப்புத் துறை, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஓடிடி தளங்களின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளது. இந்தியாவில் பதிப்புரிமை மீறல் என்பது வெறும் சிவில் விவகாரம் அல்ல; 1957 பதிப்புரிமைச் சட்டம் மற்றும் 1952 சினிமாட்டோகிராப் சட்டத்தின் கீழ் கடுமையான கிரிமினல் குற்றமாகும் என்றும் நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுவரை அரசு புகார் அளிக்கும் குறிப்பிட்ட சேனல்களை மட்டும் நீக்கும் நடைமுறையை டெலிகிராம் பின்பற்றியதாகவும், இனிமேல் அரசாங்க உத்தரவை காத்திருக்காமல் முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை பின்பற்றத் தவறினால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் கிடைக்கும் பாதுகாப்புச் சலுகைகளை டெலிகிராம் இழக்க நேரிடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திருட்டு உள்ளடக்கங்கள் கொண்ட 3,000க்கும் மேற்பட்ட டெலிகிராம் சேனல்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்ததாகவும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒரு வார காலத் தடை விதிக்கப்பட்ட பின்னர் தடை முடிந்ததும் டெலிகிராம் மீண்டும் இந்தியாவில் செயல்பாட்டுக்கு வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.