சென்னை: முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள ஆய்வு கூட்டங்களை முன்னிட்டு, ஸ்லைடு காட்சிகள் மற்றும் வீடியோ தொகுப்புகளை உருவாக்கும் டிஜிட்டல் கிரியேட்டர்களுக்கு திடீரென தேவை அதிகரித்துள்ளது.
தமிழக அரசின் பொதுப் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து சட்டசபையில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. தற்போதைய அரசில் முதல்வர் உட்பட பல அமைச்சர்கள் புதியவர்கள் என்பதால், நிர்வாகம், துறை செயல்பாடு, திட்டங்களின் செயலாக்கம் உள்ளிட்ட விவரங்களை விரிவாக அறிந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னர் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் இதுபோன்ற தகவல்கள் அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டதோடு, சில நேரங்களில் ஆன்லைன் வழியாகவும் விளக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மொபைல், டேப், கணினி வழியாகத் தகவல்களைப் பார்க்க விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை 22 வரை துறை வாரியான ஆய்வு கூட்டங்களை முதல்வர் நடத்த உள்ளார். காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களில் விளக்குவதற்காக, துறை சார்ந்த தகவல்களை ஸ்லைடு காட்சிகளாகவும் வீடியோ தொகுப்புகளாகவும் தயாரித்து வழங்க வேண்டும் என்று தலைமைச் செயலர் மூலம் அனைத்து துறைச் செயலர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
ஒவ்வொரு துறையும் குறைந்தபட்சம் 20 ஸ்லைடுகள் தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து துறைச் செயலர்கள் பணிகளைத் தொடங்கியுள்ளதால், தலைமைச் செயலகத்தில் மின்னணு வடிவில் தகவல்களைத் தயாரித்து வழங்கும் டிஜிட்டல் கிரியேட்டர்களுக்கு வேலைப்பளு மற்றும் தேவை அதிகரித்துள்ளது.





