கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிப்பதைத் தடுக்க உச்சநீதிமன்றத்தில் திமுக இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.
2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிபிஐ விசாரணையில் உள்ளது; மேலும் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சிபிஐ பலமுறை விசாரணை நடத்தியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனுவில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து பொதுவெளியில் அவதூறான கருத்துகளை கூறி வழக்கின் தன்மையை மாற்ற முயல்வதாகவும், அது சாட்சிகளை மறைமுகமாக அச்சுறுத்தும் செயலாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதல்வர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறுவதோடு, அரசு சார்பில் நிதியுதவி மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக மனு சுட்டிக்காட்டுகிறது. இது சிபிஐயின் நடுநிலையான விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடும் என்பதால், நீதிமன்ற நடைமுறைகளைப் பின்பற்றி அந்தத் திட்டத்தை முதலில் சிபிஐயிடம் சமர்ப்பித்த பின்னரே பணி நியமனங்களை வழங்க மாநில அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என திமுக கோரியுள்ளது.
அதேபோல், விசாரணை அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத்தின் மாண்பை பாதிக்கும் வகையில் இந்த வழக்கை குறித்து பொதுவெளியில் பேசுவதற்கு முதல்வர் விஜய் உள்ளிட்டோருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தேவையற்ற விவாதங்கள் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





