லஞ்சம் பரவலாக நடைபெறுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

பிறப்பு–இறப்பு சான்றிதழ்கள் வழங்குதல், சொத்து வரி தொடர்பான பணிகள், கட்டடம் மற்றும் வீடு கட்ட அனுமதி உள்ளிட்ட வழக்கமான சேவைகளுக்கே லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்காது என்ற குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன.

நேற்று மாலை 3 மணியளவில் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம் ஆகிய மாநகராட்சி அலுவலகங்களில் சோதனை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல் பொள்ளாச்சி, கோவில்பட்டி உள்ளிட்ட நகராட்சி அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

சென்னையில் அண்ணா நகர், தேனாம்பேட்டை, பெருங்குடி, திரு.வி.க. நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டல அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சோதனை நேரத்தில் கதவுகளை மூடி, அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வெளியே செல்ல அனுமதிக்காமல், மேஜைகள், இருக்கைகள், கோப்புகள் மற்றும் பீரோக்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக தேடுதல் நடத்தினர்.

இந்த நடவடிக்கையில் கணக்கில் வராத பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் சார்-பதிவாளர் அலுவலகங்களில் நடந்த சோதனையில் ரூ.65.56 லட்சம் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.