அட்லாண்டா: பிபா உலகக் கோப்பை ‘ரவுண்ட்-32’ நாக்-அவுட் போட்டியில் ஆஸ்திரேலியாவை பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்த்திய எகிப்து, ‘ரவுண்ட்-16’ சுற்றுக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் எமாம் ஆஷூர் தலையால் முட்டி கோல் அடித்து எகிப்தை முன்னிலை பெறச் செய்தார்.
55வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா சமனாக்கியது. எய்டன் ஓ’நீல் அடித்த பந்தை தடுக்க முயன்ற எகிப்தின் முகமது ஹானி, எதிர்பாராதவிதமாக அதை தனது சொந்த கோல் போஸ்ட்டிற்குள் திருப்பியதால் ஸ்கோர் 1-1 ஆனது. 90 நிமிடங்களிலும் கூடுதல் நேரத்திலும் மேலும் கோல்கள் இல்லாததால் போட்டி பெனால்டிக்கு சென்றது.
ஷூட்-அவுட்டிற்காக 22 வயது கோல்கீப்பர் பேட்ரிக் பீச்சை மாற்றி, 34 வயது சீனியர் மேத்யூ ரயானை ஆஸ்திரேலிய பயிற்சியாளர் களமிறக்கினார். ஆனால் அந்த வியூகம் பலிக்கவில்லை. முகமது சலா, முகமது சாபர், ரமி ராபியா, ஹோசாம் அப்தெல்மஜீத் ஆகியோர் கோல் அடிக்க, எகிப்து 4-2 என வெற்றி பெற்றது.
நான்காவது உலகக் கோப்பை தொடரில் விளையாடும் எகிப்து, உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டியில் முதல் முறையாக வெற்றி பெற்று ‘ரவுண்ட்-16’ சுற்றுக்குத் தகுதி பெற்றது.





