வீடுகளில் பயன்படுத்தாமல் இருக்கும் தங்கத்தை பொருளாதார பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ‘தங்கத்தை பணமாக்கும் திட்டம்’ (Gold Monetisation Scheme) புதுப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வடிவமைப்பு குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இதில் முக்கிய மாற்றமாக, இதுவரை வங்கிகள் வழியாக மட்டுமே தங்கத்தை ஒப்படைக்க முடிந்த நிலையில், இனி நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளையும் தங்கம் சேகரிக்கும் மையங்களாக நியமிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அருகிலுள்ள நகைக்கடைகள் மூலமாகவும் திட்டத்தில் இணைவதற்கான வாய்ப்பு உருவாகும்.

இந்த திட்டத்தின் கீழ், அரசு அங்கீகரித்த மையங்களில் தங்கத்தை ஒப்படைத்து அதற்கு வட்டி பெற முடியும். வைப்பு காலம் முடிந்த பின், விதிமுறைகளின்படி தங்கமாகவோ அல்லது அதற்குரிய பண மதிப்பாகவோ திரும்ப பெறலாம்.

புதுப்பிக்கப்பட்ட திட்டம் அமலுக்கு வந்தால், அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது அனுமதி பெற்ற நகைக்கடையில் தங்கத்தை ஒப்படைக்க முடியும். தங்கத்தின் தூய்மை பரிசோதிக்கப்பட்டு எடை பதிவு செய்யப்பட்ட பின், அதனை அடிப்படையாகக் கொண்டு கணக்கு தொடங்கி, வைப்பு காலம் முழுவதும் வட்டி வழங்கப்படும்.

2015ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளில் சுமார் 38 டன் தங்கம் மட்டுமே சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாரம்பரிய நகைகளை ஒப்படைப்பதில் மக்களின் தயக்கம், வரி தொடர்பான அச்சம், வங்கிகளின் ஆர்வமின்மை மற்றும் அரசுக்கு ஏற்பட்ட அதிக செலவு ஆகியவை குறைந்த பங்கேற்புக்கான காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.