இரு பிரிவினர் இடையேயான மோதலை காரணம் காட்டி கோவில்களை மூட உத்தரவிடுவது, சூழலை கையாள முடியாத நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துகிறது என சென்னை உயர் நீதிமன்றம் அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தொட்டபூவதி கிராமத்தில் உள்ள பசவனசுவாமி மற்றும் மண்டு மாரியம்மன் கோவில்கள் தொடர்பாக இந்த வழக்கு எழுந்தது. கிராமத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, 2025 ஏப்ரல் 12 அன்று கோட்டாட்சியர் கோவில்களை மூட உத்தரவிட்டார்.

அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, கோவில் பரம்பரை அறங்காவலர் செல்வராஜ் உள்ளிட்ட ஒன்பது பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் மனு விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றம், இக்கோவில்கள் பொது அல்லது அரசு புறம்போக்கு நிலத்தில் நூற்றாண்டுக்கு மேலாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டது. பொதுமக்கள் வழிபாட்டுக்காக நிறுவப்பட்ட கோவில்களில் மக்கள் வழிபடுவதை, ஹிந்து சமய அறநிலையத் துறையோ அல்லது தனிநபர்களோ தடுக்க முடியாது என்றும், எந்த சூழலிலும் கோவில் மூடக் கூடாது என்றும் தெரிவித்தது.

சட்டம்-ஒழுங்கு காரணம் காட்டி கோவில் மூடப்படக் கூடாது; பொதுமக்கள் வழிபட அனைத்து நேரத்திலும் கோவில் திறந்திருக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியது. சட்டம்-ஒழுங்கு பிரச்னையை உருவாக்குபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம் என்றும், பிரச்னை காலவரையின்றி நீடித்தால் சமாதானம் ஏற்படும் வரை ஹிந்து சமய அறநிலையத் துறை கோவில் நிர்வாகத்தை தற்காலிகமாக கையில் எடுக்கலாம் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.