புதுடில்லி: நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் “மிகப்பெரிய அளவில் முறைகேடு” நடக்கிறது என்றும், நீதித்துறை தலையிடவில்லை என்றால் அது குடியரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறி, எதிர்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில் காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் கமிஷன் ஆளுங்கட்சியான பா.ஜ.க.க்கு ஆதரவாக செயல்படுகிறது என குற்றம்சாட்டியுள்ளன. பா.ஜ.க. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் போது மவுனம் காக்கும் தேர்தல் கமிஷன், எதிர்க்கட்சிகளை மட்டும் குறிவைக்கிறது என்றும் தெரிவித்துள்ளன.
மேலும், தேர்தல் கமிஷனின் வாக்காளர் பட்டியல் “சிறப்பு தீவிர திருத்தப் பணி” (SIR) தேவையற்றது; பேரழிவுக்கு சமம் என விமர்சித்துள்ளன. ஆவண சரிபார்ப்பு என்ற பெயரில் வாக்காளர்களின் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கி, சுமார் 25 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
டில்லி, ஹரியானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த தேர்தல்கள் மக்களின் உண்மையான விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை என்றும், அவற்றில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு மீது நம்பிக்கை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் 23 கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஒரு சுயேச்சை எம்.பி. கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ‘இண்டி’ கூட்டணியிலிருந்து சற்று விலகிய நிலைப்பாட்டில் இருந்த தி.மு.க., பல கட்சிகளின் வலியுறுத்தலுக்குப் பிறகு கடிதத்தில் கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது.





