சென்னை: தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மொத்தம் 43 நொடிகள் வெட்டப்பட்ட பிறகு, தணிக்கையில் அனுமதிக்கப்பட்ட படத்தின் நீளம் 180 நிமிடமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விஜயின் கடைசி படம் என கூறப்படும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். படம் கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியாக வேண்டியிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் தொடர்பான பிரச்னையால் வெளியீடு தாமதமானது.
தணிக்கை விவரங்களின்படி, வன்முறை மற்றும் ஆபாச வார்த்தைகளை குறைக்கும் வகையில் மொத்தம் 13 உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கில கெட்ட வார்த்தைகளை மியூட் செய்யவும், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தை சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சண்டைக் காட்சிகளில் ரத்தக்கறை போன்ற காட்சிகளும், காது அறுபடும் காட்சிகளும் குறைக்கப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பின் போது கால் பறப்பது போன்ற ஒரு காட்சி நீக்கப்பட்டுள்ளது.
தணிக்கை சான்றிதழ் பிரச்னை தீர்ந்ததால், படம் இந்த மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 23 அல்லது 30-ம் தேதி வெளியீடு இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன; அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





