மதுரையில் வைகை நதியை மீட்டெடுப்பது குறித்து கவர்னர் ஆர்.வி.அர்லேக்கர் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி தரப்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
மதுரையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர், விமான நிலையத்திலிருந்து ரிங் ரோடு வழியாக வைகை கரையோரமாக வந்ததாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, வைகையாற்றில் நீர் இல்லாததைப் பார்த்து ஆச்சரியமடைந்ததாகவும், மதுரை இளைஞர்கள் வைகையை சுத்தப்படுத்தி மீட்டெடுப்பதை இலக்காகக் கொண்டு முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். யாரும் முன்னெடுக்கவில்லை என்றால் ‘லோக் பவன்’ முயற்சி எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சி முடிந்த பின் அவர் சர்க்கியூட் ஹவுஸில் ஓய்வெடுத்த நிலையில், கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். ஆனால், கலெக்டருடன் வைகை சீரமைப்பு மற்றும் அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கவர்னர் ஆய்வு நடத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
அந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சன அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் இரவில் விளக்க அறிக்கை வெளியிட்டு, கலெக்டர், கமிஷனர், எஸ்.பி. ஆகியோர் கவர்னரை மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்ததாக தெரிவித்தது.
இதற்கிடையில் அமைச்சர் நிர்மல்குமார், மாநில நிர்வாகத்தில் கவர்னர் தலையிடுவது தேவையற்றது என்றும், லோக் பவனில் உள்ள பணிகளை மட்டும் செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும், இனி முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அனுமதியின்றி அதிகாரிகள் கவர்னரின் ஆய்வுக்கு செல்ல வேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.




