வெலிங்டன்: இந்திய பிரதமர் ஒருவர் 40 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்துக்கு வர உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்தார்.

அட்டவணைப்படி, ஜூலை 6 முதல் 11 வரை பிரதமர் மோடி இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடன் தொடரும் இணைப்புகள் இந்தப் பயணத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என கூறப்படுகிறது.

முதல் கட்டமாக ஜூலை 6 அன்று இந்தோனேஷியாவுக்கு செல்லும் அவர், பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு மெல்போர்னில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

இறுதியாக நியூசிலாந்து சென்று தனது பயணத்தை நிறைவு செய்கிறார். இந்தியா உலகின் மிகப் பெரியதும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களிலும் ஒன்றாக இருப்பதாகவும், நியூசிலாந்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியா முக்கியமானதாக இருப்பதாகவும் லக்சன் கூறினார்.

மேலும், கடந்த ஏப்ரலில் இந்தியா–நியூசிலாந்து இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை குறிப்பிட்ட அவர், இதன் மூலம் இரு நாடுகளின் உறவு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாகவும், வேலைவாய்ப்புகள், ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு இது உதவும் என்றும் தெரிவித்தார்.