தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மும்பை, தானே, பால்கர், ராய்கர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் விக்ரோலி, கட்கோபர், செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. சனிக்கிழமையும் மழை விடாமல் தொடர்ந்ததால் பல இடங்களில் முழங்கால் அளவு வரை வெள்ளநீர் தேங்கியதாக கூறப்படுகிறது.

தாழ்வான பகுதிகளான தாதர், புரேல், அந்தேரி உள்ளிட்ட இடங்களில் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பாந்த்ரா மேற்கு பகுதியில் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து முடங்கிய நிலையில், அப்பகுதியில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புறநகர் ரயில் சேவைகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது; ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் நிலவியது. விமான சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டதுடன், சில விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, மும்பை, தானே, கல்யாண் பகுதிகளில் ஜூலை 4 அன்று கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை மேலும் நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், பயணம் தொடங்கும் முன் இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் விமான நிலவரத்தை சரிபார்க்குமாறு இண்டிகோ நிறுவனம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.